நானும் ஒரு பதிவினை இணையத்தில் பதித்திட ஆசைப்பட்டேன்.பல நாட்கள் கழித்து இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்தது.என் உணர்வுகளை வெளிபடுத்த முயல்கிறேன் ........
கல்லூரியில் படித்து முடித்து பல ஆசைகளுடன் வேலைக்கு சென்றால் அங்கே தினம் தோறும் காணும் காட்சிகளை பார்த்து இதயமே நின்று விடுகிறது. ஒரு மனிதனின் வாழ்க்கை எவ்வளவு சீக்கிரத்தில் முடிந்து விடுகிறது என்பதை காணும் போது கண்கள் நிறைந்து விடுகிறது.அதற்கு உதாரணமாக சில தினங்களுக்கு முன்பு என்னுடைய இரவு நேர பணியில் நடந்த இரு நிகழ்சிகளை பகிர்ந்து கொள்கிறேன்.
என்னுடைய 6 நாள் இரவு பணியில் 4-ம் நாள், வழக்கம் போல் நோயாளிகளை கவனித்து கொண்டு எங்கள் பணியை செய்து கொண்டிருந்தோம்.அப்போது வடகிழக்கு இந்திய மாநிலத்தை சார்ந்த முதியவர் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில்அனுமதிக்க பட்டிருந்தார். அவரிடம் அதற்கு முந்தய நாள் நான் செய்கை முறையில் உரையாடினேன்.எனக்கு அவருடைய மொழி புரியவில்லை, ஆனால் அடுத்த நாள் அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தார்.அவரை அவசர சிகிச்சை பிரிவில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றுவதற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டே இருந்தது.ஆனால் அவருடைய நிலை கவலைக்கிடமாவதை கண்டோம்.அதன் பின் 5 நிமிட இடைவெளியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.சில நிமிடங்களில் அவரது உயிர் பிரிந்தது .அவரது மகனது அழுகையை என்னால் விவரிக்க முடியவில்லை.எங்களால் ஆறுதல் சொல்லவும் முடியவில்லை.முந்தைய தினம் என் கையை பிடித்து ஏதேதோ பேச முயன்ற அந்த மனிதர் பேச்சில்லாமல், மூச்சும் இல்லாமல் இருந்த காட்சி என் இதயத்தை மட்டுமல்ல என் நண்பர்களையும் கண் கலங்க வைத்தது.
இதற்கு பின் ஒரு மணி நேர இடைவெளியில் ஒரு முதியவர் தன் மனைவியை வெகு தூரத்தில் இருந்து சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார் . அவரை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு எந்த நேரம் வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்று கூறினார். இதை அவரது கணவரான அந்த முதியவரிடம் சொன்ன பொழுதே அவர் கண்கள் கலங்கின.மருத்துவர் சொன்னது போலவே வெறும் ஒரு மணி நேர இடைவெளியில் 'Massive Cardiac Arrest' (கடுமையான மாரடைப்பு ) ஏற்பட்டது .அந்த தாயின் உயிர் பிரியும் நேரம் வருவதை எங்களால் காண முடிந்தது.என்னால் அதற்கு மேல் அங்கே இருக்க முடியவில்லை.நான் அந்த அறையை விட்டு வெளியேறிய போது அந்த முதியவர் என்னிடம் வந்து 'அவள் மூச்சு விடுகிறாளா ? ' என்று கேட்டார் .அந்த ஒரு கணம் நான் அவருக்கு என்ன சொல்வது என்று நிஜமாகவே தெரியவில்லை . மூச்சு நிற்க போகும் தருவாயில் தன் மனைவியை பற்றி அவர் கேட்டது அந்த வார்த்தை துயரத்தின் உச்ச கட்டமாக இருந்தது .சில மணி நேரத்தில் தன் வாழ்க்கையை இழந்த தன் மனைவியை நினைத்து அழ முடியாமல் அழுததை மீண்டும் கண் முன்னால் கொண்டு வர இயலவில்லை . அதற்க்கு பிறகு நடந்த நிகழ்சிகளை நான் விவரிக்க விரும்பவில்லை.
பல மணிதுளிகள் போராடியும் இந்த இரு உயிர்களையும் அந்த இரவில் காப்பாற்ற முடியவில்லை.என்னடா வாழ்க்கை இது என்று தோன்றுகிறது.
அழவும் முடியவில்லை,அழாமல் இருக்கவும் முடியவில்லை இந்த கொடுமைகளை நினைத்து !!!
இது வெறும் ஒரு இரவின் அனுபவம்.தினம் தினம் பல அனுபவங்கள் .இதயம் கனத்து விட மறுக்கிறது !!!
எங்கள் இரவுகள் மரண அழுகுரலில் தான் விடிகின்றது ............பல நாட்களில் !!!!!!!
(Make ur heart so much hard b4 u chose Nursing)